3 தொகுதிகளில் தள்ளாடும் காங்கிரஸ்…? பரிதவிக்கும் செல்வப்பெருந்தகை..!

1 month ago 31
ARTICLE AD BOX

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. எனினும் தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக இடம்பெற்றிருக்கும் காங்கிரசுக்கு சோதனை மேல் சோதனை என்பது போல நெல்லை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று தொகுதிகளையும் இழப்பதற்கான அறிகுறி இப்போதே தென்படுகிறது.

முதலில் காங்கிரசுக்கு எத்தனை எம்பி சீட்டுகளை திமுக தலைமை ஒதுக்கும் என்ற கேள்விக்கான விடை மார்ச் முதல் வாரம் வரை கிடைக்கவில்லை. இரண்டு மாதங்களாக நீடித்து வந்த தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தையில் ஒரு வழியாக கடந்த 9ம் தேதி உடன்பாடு ஏற்பட்டது. இதனால் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

ஏனென்றால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்பு எந்த சிக்கலும் இல்லாமல் தொகுதி பங்கீடு முடிந்ததாலும் அவருடைய தலைமையில் தமிழக காங்கிரஸ் சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் என்பதாலும் செல்வபெருந்தகைக்கு இது மிகப் பெரியதொரு சாதனையாக தெரிந்தது.

இந்த உடன்பாட்டின்படி காங்கிரசுக்கு திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், கரூர், நெல்லை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 2019 தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி எம்பி சீட்டுகள் மறுக்கப்பட்டன. அதேநேரம் இதில் பல சூட்சமங்கள் இருப்பதை காங்கிரஸ் புரிந்துகொண்டதாக தெரியவில்லை என்கிறார்கள்.

நெல்லை தொகுதியின் தற்போதைய திமுக எம்பி ஞானதிரவியத்தின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பதால் அங்கு திமுக மீண்டும் போட்டியிட்டால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளிடம் பலத்த போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று கருதித்தான் அந்த தொகுதியை காங்கிரசுக்கு அறிவாலயம் விட்டுக் கொடுத்தது என்று கூறப்படுகிறது.

இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட பீட்டர் அல்போன்ஸ், ராம சுப்பு, பால்ராஜ், காமராஜ், ரூபி மனோகரன் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் தங்களது மாவட்டத்தை சாராத ஒருவருக்கு நெல்லை தொகுதியை ஒதுக்குவதா?… என்று காங்கிரசில் பல நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தினர். கடும் அதிருப்தியடைந்த முன்னாள் எம்பி ராமசுப்பு அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக வேட்பு மனு தாக்கலும் செய்தார். பின்னர் அதை அவர் வாபஸ் பெற்றும் கொண்டார்.

இதனால் ராபர்ட் புரூஸ்க்கு நெல்லை தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் முழு மனதோடு தேர்தல் வேலை பார்ப்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதேநேரம் தொகுதி மக்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ள பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாகவும், அவர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதுபற்றி கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அந்த நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த பிறகே அரைகுறை மனதுடன் அவர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுவதாகவும், அதில் நயினார் நாகேந்திரன் முன்னணியில் இருக்கிறார் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

அடுத்ததாக மயிலாடுதுறை. இங்கு திமுக எம்பியான ராமலிங்கத்துக்கு தொகுதி மக்களிடம் அவ்வளவாக மதிப்பு இல்லை என்பதால் அந்த சீட்டையும் நைசாக திமுக தலைமை காங்கிரசுக்கு ஒதுக்கி விட்டது என்ற பேச்சும் உள்ளது.

இங்கு காங்கிரஸ் சார்பாக சுதா ராமகிருஷ்ணன் நிறுத்தப்பட்டு இருக்கிறார். பிரபல வக்கீலான இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர். தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாகவும் பதவி வகிக்கிறார்.

மயிலாடுதுறையில் போட்டியிட ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி, மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர், ஏற்கனவே தொகுதி கிடைக்காமல் தத்தளித்து வந்த எம்பிக்கள் திருநாவுக்கரசர், செல்லகுமார் மற்றும் நாசே ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் தீவிரமாக முயன்ற நிலையில் கடைசியில் தொகுதியை சுதா தட்டிக் கொண்டுபோய்விட்டார்.

தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர் போட்டியிடுவதாலும், அவர் உள்ளூர் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் முழுமையான ஆதரவை பெறுவது கடினம் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம் இத்தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலின் அவருடைய கட்சி ஓட்டுகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நெருக்கடி காணப்படுகிறது. பாஜகவுக்கு இங்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை என்பது வெளிப்படை. இதனால் மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் பாபுவுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் சுதாவுக்கும் இடையேதான் பலத்தப் போட்டி நிலவுகிறது. இதில் பாபு சற்று முன்னணியில் இருக்கிறார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக உள்ளது.

கடலூர் தொகுதியை பொறுத்தவரை தற்போதைய திமுக எம்பியான ரமேஷ் ஒரு கொலை வழக்கில் சிக்கி இருப்பதால் அவரால் மாவட்டத்தில் திமுகவுக்கு பெரிய அளவில் அவப்பெயர் ஏற்பட்டு இருக்கிறது என்கிறார்கள். இதையும் மீறி கடலூரில் போட்டியிட்டால் வெற்றி கிடைப்பது கடினம் என்ற நிலையில்தான் அந்தத் தொகுதியை காங்கிரசுக்கு திமுக தள்ளிவிட்டது என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாகவே அடிபடுகிறது.

மேலும் ஆரணி தொகுதி எம்பியான விஷ்ணு பிரசாத் மீண்டும் அங்கே போட்டியிட்டு விடக்கூடாது என்பதற்காகதான் கடலூரை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியது,
என கூறப்படுவதுண்டு.

ஏற்கனவே இப்படி பல இடியாப்ப சிக்கல்கள் உள்ள நிலையில் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டது போல கடலூரில் விஷ்ணு பிரசாத் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் வாய்ப்பு அளித்திருக்கிறது. அவர் தொகுதி மாறி போட்டியிடுவதால் உள்ளூர் காங்கிரசார் கொதிப்பில் இருக்கின்றனர். இதுவரை விஷ்ணு பிரசாத்துக்கு ஆதரவாக அவர்கள் ஓட்டு கேட்டதாகவும் தெரியவில்லை.

அதேநேரம் திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஓரளவுக்கு கடலூர் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உண்டு. ஆனால் அக்கட்சியின் தலைவர் வேல்முருகனோ 2009ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் காரணம். அதனால் நான் காங்கிரசுக்கு ஓட்டு போடவும் மாட்டேன், பிரச்சாரமும் செய்ய மாட்டேன் என்பதில் இன்று வரை உறுதியாக இருக்கிறார். இது இங்கு போட்டியிடும் காங்கிரசுக்கு இன்னொரு மைனஸ் பாயிண்ட்.

அதேநேரம் பாஜக கூட்டணியில் கடலூர் தொகுதியில் பாமக சார்பாக
இயக்குனர் தங்கர் பச்சான் களம் காண்கிறார். சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி என்எல்சி நிறுவனம் விவசாய நிலங்களை கையகப்படுத்தியதை கண்டித்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆயிரக் கணக்கானோரை திரட்டி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார். ஆனால் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து நெய்வேலி சட்டப் பேரவை தொகுதி அடங்கிய கடலூரில் பாமக போட்டியிடுகிறது. இதனால் அங்கு டாக்டர் அன்புமணி ஓட்டு கேட்டால் பாமகவுக்கு அப்படியே முழுமையாக கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

இப்படிப்பட்ட பல்வேறு உள்ளூர் பிரச்சனைகள் காரணமாக அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே அதிகம் தென்படுகிறது.

இதனால் நெல்லை, மயிலாடுதுறை, கடலூர் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே இறக்கை கட்டி பறக்கிறது.

The station 3 தொகுதிகளில் தள்ளாடும் காங்கிரஸ்…? பரிதவிக்கும் செல்வப்பெருந்தகை..! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article